கணித மேதை சகுந்தலா தேவி
1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி, கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகுந்தலா. இவருடைய தந்தை ஒரு சர்க்கஸில் வேலைபார்த்து வந்தார். சுவாரஸ்யமான வித்தைகளை ரசிகர்கள் முன் செய்துகாட்டி அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தவருக்கு, தன் வீட்டிலேயே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது.
சர்க்கஸில் காட்டிய வித்தைகளில் ஒன்றான சீட்டுக் கட்டு வித்தையை தன் மகள் சகுந்தலாவிடம் அவர் அப்பா விளையாட்டுக்குச் செய்துகாட்ட, அதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த மூன்று வயது சகுந்தலா, ஒருநாள், 'நானும் கொஞ்சம் சீட்டில் வித்தை காட்டட்டுமா?' என்று கேட்டு, தந்தையை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். 'இனிமேல் நாம் சர்க்கஸ் வேலைக்குப் போக வேண்டியதில்லை. இந்த சீட்டு வித்தை போதும்' எனத் தன் மகள் சகுந்தலாவுடன் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார் அவர்.
வித்தை மூலம் வருமானம் வந்ததோடு, சகுந்தலாவின் திறமையும் வெளிப்பட்டது. தன் ஆறு வயதில் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை மைசூர் பல்கலைக்கழகத்திலும், எட்டு வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தார்.
கணிதப் புதிர்களுக்கு கம்ப்யூட்டர், கால்குலேட்டர் இயந்திரங்களின் வேகத்தை முந்தி விடையளிக்கும் திறமை பெற்றிருந்தவர் சகுந்தலா. தன் கணிதத் திறமையை உலகறியச் செய்ய, அவர் பல நாடுகளுக்குச் சென்று வந்தார். 1977-ம் ஆண்டு 201-க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இரண்டு 13 இலக்க எண்களைப் (7,868, 369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) பெருக்கி, 28 விநாடிகளில் விடை கூறி, உலகையே வியக்கவைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்டது. இதுவே அவரது உலக சாதனையானது.
ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்கின் விடையை, மிகச் சில நொடிகளிலேயே தீர்த்த சகுந்தலாவின் சாதனை, வரலாற்றில் உள்ளது.
கணிதத்தில் மட்டுமல்லாமல் ஜோதிடக் கலையிலும் வல்லவராக இருந்தார் சகுந்தலா. பின் வரும் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் வகையில், கணிதவியலைப் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகங்கள் பல. ‘புக் நம்பர்ஸ்’, ‘பெர்ஃபெக்ட் மர்டர்’, ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’, ‘இன் தி வொண்டேர்லேண்ட் ஆஃப் நம்பர்ஸ்’, ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’ என அந்த நூல்கள் அவர் திறமையின் சான்றுகளாக, நமக்குப் பயன் தந்துகொண்டிருக்கின்றன.
உடல் நலக் குறைவினால், 2013 ஏப்ரல் 3-ம் தேதி காலமானார் சகுந்தலா தேவி. இந்தியாவின் இந்த பெண் கணித மேதை, மறக்கமுடியாத ஆளுமை.